4 percent quota for disability students in Government jobs – அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ஸ்டாலின்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்வித தாமதமும் இன்றி வழங்கிட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.


நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசு துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.